தமிழன் பத்திரிகையில் பாடசாலை சம்பந்தமாக வெளியிடப்பட்ட செய்தி.
இரண்டாம் தவணைப் பரீட்சை நடந்துகொண்டிருக்கும் காலமிது. பரீட்சை நகர்வுகளில் பாடசாலை இயங்கிக்கொண்டிருந்தது.
இவ்வேளையில், தமிழன் பத்திரிகையில் (18.11.2022) எமது பாடசாலை தொடர்பான ஒரு செய்தி வெளியாகியிருந்தது.
அவ்வாறு அப்பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்திதான் என்ன ?
=====================
தமிழன் பத்திரிகையில் வெளியான செய்தி.
👇🏻
வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர் ஒருவருக்கு பகிர்ந்து சாப்பிட தினந்தோறும் உணவு கொண்டுவந்து வழங்கி வருகின்ற முன்மாதிரிமிக்க மனிதாபிமான செயலைச் செய்துவரும் தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவி ஜே.எவ். இப்லா அதிபர் உட்பட அதிதி மற்றும் ஆசிரியர்களால் புடைசூழ பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
இம்மாணவியின் சிறப்பான மனிதாபிமான முயற்சியைப் பாராட்டும் முகமாக சபையோரால் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்ட நிகழ்வு நேற்று சாய்ந்தமருது அல் - ஹிலால் பாடசாலையில் நடைபெற்றது.
இவ்வுணவை தினந்தோறும் வழங்குவதற்கு உறுதுணையாக இருக்கின்ற அவரது பெற்றோரும் இதன்போது பாராட்டப்பட்டனர்.
இந்நிகழ்வுக்கு பொறியியலாளர் எம்.சீ.கமால் நிஸாத் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
நடைபெறவிருக்கும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு நடத்தப்பட்ட முன்னோடி பரீட்சைகளில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை ஊக்குவித்து கௌரவிக்கின்ற நிகழ் வின்போதே இவர் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்
கல்லூரியின் அதிபர் யூ.எல்.நசார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது , 13 முன்னோடிப் பரீட்சைகள் நடத்தப்பட்டு அதில் 10 ஆவது பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் வரிசையில் 1 ஆம் , 2 ஆம் , 3 ஆம் இடங்களைப் பெற்ற மாணவர்கள் உட்பட வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களும் பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், உதவி அதிபர்களான எம்.எச்.நுஸ்ரத் பேகம், ஐனுல் மர்சுனா மற்றும் ஆசிரியர்கள், தரம் 5 பகுதித் தலைவர், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
👆🏻 இவ்வாறு அந்தச் செய்தி வெளியாகியிருந்தது.
====================
இதே நேரம் எமது மாணவர்களை நினைத்து பெருமைப்படக்கூடிய நிகழ்வுகள் நிறையவே இருக்கின்றன.
இடைவேளை நேரத்தில் தமது உணவை ஏனைய மாணவர்களுடன் பகிர்ந்துண்ணும் மாணவ மாணவியரும் இருக்கவே செய்கின்றனர். இன்றைய சூழ்நிலையில் இத்தகைய உதவும் மனப்பான்மையை வளர்க்கும் பெற்றோரும் இருக்கவே செய்கின்றனர்.
Comments
Post a Comment